சிறையில் உள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பாரிய போராட்ட பேரணிக்கு முன்னதாக, பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என அவரது மகன் சுலைமான் கான் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி, ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த போராட்டத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்லாமாபாத்தில் வீதிகளில் நூற்றுக்கணக்கான கப்பல் கொள்கலன்கள் தடுப்புகளாக வைக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்திற்கு முன்னதாக இம்ரான் கானின் மூன்று சகோதரிகள் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், PTI கட்சியின் பல செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்ரான் கானின் மூத்த மகன் சுலைமான் கான், குடும்ப உறுப்பினர்களை கைது செய்திருப்பது ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு முன்னதாக அவர்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
“எங்கள் குடும்ப உறுப்பினர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, இரவு நேரத்தில் காரணங்கள் எதுவும் தெரிவிக்காமல் அழைத்துச் செல்லப்பட்டிருப்பது அவமானகரமானது” என அவர் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கானின் மற்றொரு மகன் காசிம் கான், சமூக ஊடகமான X தளத்தில், “குடும்பங்களை கைது செய்யலாம், மக்களை வன்முறையால் அச்சுறுத்தலாம். ஆனால் 25 கோடி பாகிஸ்தானியர்களை சிறையில் அடைக்கவோ, ஒரு தலைமுறையின் விருப்பத்தை நசுக்கவோ முடியாது” என பதிவிட்டுள்ளார்.
PTI கட்சியின் மூத்த தலைவர் சுல்பிகார் அலி புகாரி, திட்டமிட்ட போராட்டம் நடைபெறும் எனவும், அது ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்படாமல் பல நாட்களுக்கு நீடிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, போராட்டத்தை இஸ்லாமாபாத்தை அடைய அனுமதிக்கப் போவதில்லை என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். போராட்டத்தை கைவிடுமாறு PTI தலைமையிடமும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொது ஒழுங்கை பேணுவதற்காகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கைது நடவடிக்கைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ளன.
இம்ரான் கான் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து சிறையில் உள்ளார். ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அரச பரிசுகள் தொடர்பான தனி வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அவர் அனுபவித்து வருகிறார்.
இம்ரான் கானின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரும் PTI கட்சியினரும் கவலை வெளியிட்டுள்ள நிலையில், அவர் தவறாக நடத்தப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசாங்கம் மறுத்துள்ளது.
இதனிடையே, திட்டமிடப்பட்ட போராட்டத்தை முன்னிட்டு இஸ்லாமாபாத்தில் 22,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், அட்டொக் மாவட்டத்தில் 30,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், போராட்டம் காரணமாக ஏற்படக்கூடிய அவசர நிலையை எதிர்கொள்ள இஸ்லாமாபாத்திலுள்ள வைத்தியசாலைகளை தயார்நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், “பாரிய உயிரிழப்பு சம்பவம்” தொடர்பான இந்த தகவலை The Independent சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.
(The Independent)








