சிறுவர்களின் கண்ணியம், தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில், சிறுவர் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கான தேசிய ஊடக வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுசார் ஆலோசனைக் குழு, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தலைமையில் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்களில் சிறுவர்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது பின்பற்ற வேண்டிய தரநிலைகளை இந்த வழிகாட்டுதல்கள் கொண்டிருக்கும்.
சிறுவர்களின் சிறந்த நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், செய்தி அறிக்கைகளில் துல்லியம் மற்றும் நியாயத்தன்மையை உறுதி செய்வதும், சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தேவையற்ற வகையில் ஊடக வெளிச்சத்திற்கு உள்ளாவதைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும்.
மாற்றுத்திறனாளி சிறுவர்கள் தொடர்பான செய்தி வெளியீடுகளின்போது அவர்களின் கண்ணியம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் குழு வலியுறுத்தியது.
தமிழ் பேசும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் முறைப்பாடுகள்
இதனிடையே, குறிப்பாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் பேசும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிகாரிகளிடம் முறைப்பாடுகளை முன்வைக்கும்போது எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
தமிழ் பேசும் பகுதிகளில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுகளை வலுப்படுத்தும் வகையில், மேலும் தமிழ் பேசும் பெண் பொலிஸ் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்து பயிற்சியளிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
சிறுவர் இல்லங்களை கண்காணிக்க மத்திய தகவல் கட்டமைப்பு
நாடு முழுவதும் இயங்கி வரும் சிறுவர் இல்லங்களின் ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.
சிறுவர் இல்லங்கள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய மத்திய தகவல் கட்டமைப்பொன்றை உருவாக்குவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் குறித்த நிறுவனங்களின் நிர்வாகங்கள் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்வது தொடர்பான விடயமும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பான விடயங்களில் இறுதி முடிவை எடுப்பதற்காக தொழில்நுட்பக் குழுவொன்று செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களின் சிறுவர்களுக்காக ஏற்படும் கல்விச் செலவுகளை மீளச் செலுத்தும் திட்டம் தொடர்பிலும் அதிகாரிகள் கலந்துரையாடினர்.
2027ஆம் ஆண்டுக்குள் முன்பள்ளிகளுக்கு பொதுத் தரநிலைகள்
2027ஆம் ஆண்டுக்குள் அனைத்து முன்பள்ளிகளுக்கும் பொதுவான தரநிலைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான திட்டங்களும் ஆராயப்பட்டன.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுவான பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவதுடன், முன்பள்ளிகளில் நிலவும் உட்கட்டமைப்பு குறைபாடுகளுக்கும் தீர்வு காண வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.
நீதித்துறை மருத்துவ அதிகாரிகளின் அறிக்கைகள் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக்கொள்வது, சட்டமா அதிபர் திணைக்களத்தில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது மற்றும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை துரிதமாக விசாரிப்பதற்கான விசேட பொறிமுறையொன்றை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதை சட்டரீதியாகத் தடை செய்வதற்கான முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன, ஏனைய பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.









