சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனின் பெற்றோரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (21) நேரில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இயன்றளவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.
இதற்காக சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் இலங்கை அரசாங்கம் தலையீடு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கையொன்றை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக இதுவரை உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அனோஜனின் பெற்றோருக்கு ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.
மேலும், குறித்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாகவும் உன்னிப்பாகவும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.








