ஏ.எஸ்.எம். ஜாவித்
பிரபல சர்வதேச தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன், பீர் சாகிப் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் நியாஸ் மெளலவி பவுண்டேஷன் இணைந்து 555 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைத்துள்ளன.
வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த, மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் மூவினங்களையும் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்காக இந்த இலவச வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சிறப்பு வைத்தியர்களினால் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பரிசோதனையின் அடிப்படையில் மூக்குக் கண்ணாடிகள் தேவைப்பட்ட 555 பேருக்கு அவை இலவசமாக வழங்கப்பட்டன.
நியாஸ் மெளலவி பவுண்டேஷனின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், தாருல் ஈமான் அக்கடமியின் பணிப்பாளருமான அல்-ஹாபிஸ் மெளலவி லமீர் ஹஸ்ரத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பவுண்டேஷனின் தொண்டர்கள் மற்றும் மாணவிகள் இணைந்து கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைத்தனர்.
இதேவேளை, கடந்த மாதம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையுடன் இணைந்து சுமார் 300 பேருக்கு இலவசமாக கண்புரை சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.












