தினச்சுடர் தேசிய விருது வழங்கும் நிகழ்வில் 46 பன்முக ஆளுமைகள் கௌரவிப்பு
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘தினச்சுடர் தேசிய விருது’ வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில், இலங்கையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 46 பன்முக ஆளுமைகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நேற்று (17) நடைபெற்ற இந்நிகழ்வில், Colombo Times ஊடகவியலாளர் அப்ரா அன்சாருக்கு ‘இளம் இலக்கிய மாமணி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தினச்சுடர் பத்திரிகையின் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான ஏ.எம். முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான முஜிபுர் ரஹுமான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
திரைப்பட இயக்குநரும் நடிகருமான திருவாய் மொழி கேசவன் மற்றும் கலைஞர் குணசேகரன் உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், பாடகர்கள், நடிகர்கள், இலக்கியவாதிகள், மேடை நாடகக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், சமூக சேவையாளர்கள், நூலாசிரியர்கள், அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 46 பேர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இலக்கியம் மற்றும் எழுத்துத்துறையில் ஆற்றிவரும் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அப்ரா அன்சாருக்கு ‘இளம் இலக்கிய மாமணி’ விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பட உதவி; எம்.எஸ்.எம் ஸலீம்
(புகைப்பட ஊடகவியலாளர்)










