சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிவராசா அனோஜனுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்காக இலங்கைத் தூதரகம் தலையிட்டுள்ளதாகவும், இதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, குறித்த விடயத்தில் சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமையவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.








