2026 செப்டம்பர் 15ஆம் திகதி முதல் தனக்கு எதிராக வெளியிடப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தக் குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வாக்குமூலத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான “தம்பியன்” என அழைக்கப்படும் நபர், கடந்த காலங்களில் தனது அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டதுடன், தமது சமூகத்திற்கு எதிரான கருத்துகளையும் வெளியிட்டவர் எனவும் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
எனவே, அவர் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், ஊடகங்களில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகளைத் தான் முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (19) நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், முறையான மற்றும் தகுந்த ஆதாரங்கள் இன்றி வெறும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்டார்.
கடந்த காலத்திலும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தன்னை தொடர்புபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது தான் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது தமக்கு எதிராக எந்தவித ஆதாரங்களும் இல்லை என அதிகாரிகள் நீதிமன்றங்களுக்கு அறிவித்திருந்ததாகவும் அவர் கூறினார்.
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்ததில்லை என்றும், அவ்வாறான எந்த நடவடிக்கைகளுடனும் தனக்கு தொடர்பில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தனக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தவறான தகவல்களைப் பயன்படுத்தி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால், அது உரிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், ஊடக செய்திகள் அல்லது ஆதாரமற்ற பிரசாரங்களின் அடிப்படையில் ஒருவரை குற்றவாளியாக அறிவிப்பது பொருத்தமானதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், எந்தவொரு சட்டபூர்வமான விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆதாரமின்றி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்டத்தின் ஊடாக தனது உரிமைகளுக்காகப் போராடுவதாகவும் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
உணர்திறன் மிக்க இவ்வாறான விடயங்களில் ஊடகங்களும் பொதுமக்களும் பொறுப்புடன் செயற்படுவதுடன், சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில் முடிவுகளுக்கு வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.








