சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஆட்சேபனைக்குரிய கருத்துக்காக இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட ஐந்து வருட சிறைத்தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கவலை வெளியிட்டுள்ளார்.
அனோஜனுக்கு சவுதி அரேபிய அதிகாரிகள் கருணை காட்டி தண்டனைத் தளர்வு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றும், நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ எழுத்துமூல தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஆட்சேபனைக்குரிய சமூக வலைத்தளக் கருத்தொன்றுக்காக ஐந்து வருட சிறைத்தண்டனை விதிப்பதே அதிகமான தண்டனை எனக் குறிப்பிட்ட அவர், அதற்காக மரண தண்டனை விதிப்பது “மிகவும் அளவுக்கு மீறியதும், மனிதாபிமானமற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்” என தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவை அனோஜன் சில நிமிடங்களிலேயே நீக்கியதுடன், பகிரங்க காணொளி மூலம் மன்னிப்பும் கோரியதாக வெளியாகியுள்ள தகவல்களையும் தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனோஜனுக்கு பயனுள்ள சட்ட உதவியை வழங்குவதுடன், உயர்மட்டத்தில் அவசர இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
“நீதியில் கருணைக்கும் இடமிருக்க வேண்டும். அனோஜன் தனது குடும்பத்திடம் திரும்பி, தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல், உத்தியோகபூர்வ எழுத்துமூல தீர்ப்பு கிடைக்கும் வரை இலங்கை அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை.








