இந்தியாவின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இரு தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுவதால், ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
இரு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் நாளை (19) வெளியிடப்படவுள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளின் நிர்வாகிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தலா இரண்டு நாட்கள் என நான்கு நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தாராபுரத்தில் எதிர்வரும் 25ஆம் திகதியும், அடுத்த மாதம் 2ஆம் திகதியும் விஜய் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாராபுரம் – உடுமலை வீதியில் உள்ள திருமலைபாளையம் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யின் தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.







