பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதுடன், அவரது பிணைக் கோரிக்கை தொடர்பான தீர்மானமும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.








