கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ், பிரைம் மெல்வா (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வணிகமாக பெயரிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, குறித்த நிறுவனத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள விலக்குகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் 53ஆம் பிரிவின் கீழ், ஒரு வணிகத்தை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகமாக பெயரிடுவதற்கும், அவ்வாறான வணிகங்களுக்கு விலக்குகள் அல்லது ஊக்குவிப்புகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனினும், இதற்காக அமைச்சரவையின் அனுமதி பெறுவது அவசியமாகும்.
இந்நிலையில், பிரைம் மெல்வா (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் எதிர்வரும் சில ஆண்டுகளில் 112.2 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 15.9 பில்லியன் ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும், கொழும்பு துறைமுக நகரத்திற்குள் கலப்பு பயன்பாட்டு நீர்முக அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்கவும், இதன் மூலம் சுமார் 800 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.





