ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் ஒன்று கண்ணிவெடியில் சிக்கியதாக ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ள நிலையில், இந்தக் கூற்றை அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) மறுத்துள்ளது.
‘El Gaia’ என்ற பனாமா கொடியுடன் பயணிக்கும் எண்ணெய் கப்பல் கடந்த மாதம் ஈரானிய ஏவுகணையால் தாக்கப்பட்டதாகவும், இந்த வார இறுதியில் ஓமான் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்தபோது மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் CENTCOM தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈரான் பேச்சுவார்த்தைக்கு விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுபடுமா என்பதை தானே தீர்மானிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாயி, எண்ணெய் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான நிலைமைகள் மாறியுள்ளதாகவும், ஈரானின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், தெற்கு செங்கடலில் உள்ள கிரேட்டர் ஹனிஷ் மற்றும் லெஸ்ஸர் ஹனிஷ் தீவுகளை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக ஹூதிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் சவூதி போர் விமானங்கள் 129 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.








