நாட்டின் பல மாகாணங்களை உள்ளடக்கிய விசேட டெங்கு ஒழிப்பு வாரம் இன்று (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை செப்டெம்பர் 19ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மத்திய, கிழக்கு, வடமேல், வடக்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்த 62 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இது முன்னெடுக்கப்படுகிறது.
மழையுடன் நுளம்புகள் பெருகும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், டெங்கு நோய் மீண்டும் தீவிரமடைவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
கடந்த இரண்டு மாதங்களில் நாளாந்தம் 1,200 முதல் 1,300 வரையான டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் தற்போது அந்த எண்ணிக்கை நாளொன்றுக்கு 100 முதல் 200 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் ஆண்டு முழுவதும் காணப்படுவதால், மீண்டும் ஒரு டெங்கு தொற்று நிலை ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந்த ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டெம்பர் 13ஆம் திகதி வரையான தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 74 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 51,426 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 20,742 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 19,235 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் மாகாணத்தில் 13,030 பேரும், மத்திய மாகாணத்தில் 9,104 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,059 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாதாந்த தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் 23,334 பேரும், ஜூலை மாதத்தில் 21,965 பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 20,195 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் 7,896 பேரும், மார்ச் மாதத்தில் 6,721 பேரும் பதிவாகியிருந்தனர்.







