அநுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ரூ.7,148 மில்லியன் செலவில் புதிய வைத்தியசாலை கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை (16) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் (JICA) மற்றும் இந்திய அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டங்களின் ஊடாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும், சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் ரூ.3,545 மில்லியன் செலவில் 8 மாடிகளைக் கொண்ட இருதய சிகிச்சை வளாகம் அமைக்கப்படவுள்ளது. இதில் இருதய தீவிர சிகிச்சைப் பிரிவு, கரோனரி சிகிச்சைப் பிரிவு, கதீட்டர் ஆய்வகங்கள், விடுதிகள், கிளினிக்குகள், ஆய்வகங்கள், எக்ஸ்ரே, ECG உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் JICA கடன் உதவியின் கீழ் ரூ.2,403 மில்லியன் செலவில் மற்றுமொரு 8 மாடி இருதய சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ரூ.600 மில்லியன் செலவில் நவீன அவசர விபத்து மற்றும் சிகிச்சைப் பிரிவும், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் ரூ.600 மில்லியன் செலவில் நோயாளர்களின் நெரிசலைக் குறைக்கும் வகையில் 4 மாடி விடுதி வளாகமும் அமைக்கப்படவுள்ளன.
மன்னார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைகளுக்கான திட்டங்கள் இந்தியாவின் ரூ.1,200 மில்லியன் கடன் உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மாகாண ஆளுநர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கைக்கான JICA பிரதம பிரதிநிதி ஷிகேயோ ஹொன்சு மற்றும் ஜப்பான் தூதுவர் அகியோ இசோமட்டா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கொழும்புக்கு தொலைவான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தங்களது பிரதேசங்களிலேயே சிறப்பு இருதய மற்றும் அவசர சிகிச்சைகளை விரைவாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ள இந்தத் திட்டங்கள் உதவும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.








