2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் பொதுக் கல்வி மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம் பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்றது.
பொதுக் கல்வி மறுசீரமைப்பின் ஆரம்ப கட்டமாக 2 மற்றும் 6ஆம் தரங்களுக்கான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும், 10 மற்றும் 11ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
12 மற்றும் 13ஆம் தரங்களில் சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் எதிர்காலத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பள்ளிக் கல்வியை முறையாக ஒழுங்குபடுத்துவதற்கான தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








