புதுப்பிக்கப்பட்ட பம்பலப்பிட்டிய ரயில் நிலையம் இன்று (10) பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் தேசிய ‘Dream Destination’ வேலைத்திட்டத்தின் கீழ் இந்த ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் 60 மில்லியன் ரூபாய் செலவில் இந்தப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதற்கான நிதி இலங்கையின் தாவூதி போஹ்ரா சமூகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் பிரதான கட்டடம், 1 மற்றும் 2ஆம் நடைமேடைகள், சுகாதார வசதிகள், மின்சாரம் மற்றும் நீர் வசதிகள், CCTV கண்காணிப்பு கட்டமைப்பு உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பிரதான வீதிக்கும் ரயில் பாதைக்கும் இடையில் புதிதாக நடைமேம்பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில் நிலையத்தின் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
புனரமைப்புப் பணிகள் கடந்த மார்ச் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, ஐந்து மாதங்களில் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற மீள்திறப்பு நிகழ்வில் அவர் கலந்துகொண்டார்.
‘Dream Destination’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையிலுள்ள 100 ரயில் நிலையங்களை நவீனமயப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.







