அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றுக்கான உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்-குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.
மேலும், அரபுக் கல்லூரிகளைப் பதிவு செய்தல், அல்-ஆலிம் பரீட்சைகளை மீண்டும் நடத்துதல், அரச உயர் பதவிகள் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களில் பொருத்தமான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் முறையான திருத்தங்களை மேற்கொள்ளுதல் ஆகிய விடயங்களும் முன்வைக்கப்பட்டன.
கொவிட்-19 தொற்று காலத்தில் கட்டாய தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுக்கான நீதி மற்றும் அது தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குதல், அரச துறைகளில் பணியாற்றும் முஸ்லிம் உத்தியோகத்தர்களின் மத மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பில் காணப்படும் பாரபட்சங்களை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இவ்விடயங்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், உரிய தரப்புகளுடன் கலந்துரையாடி விரைவில் சாதகமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான், உப தலைவர்களான அஷ்-ஷைக் எச். உமர்தீன் மற்றும் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம், உப பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டனர்.









