இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தின் (SLS) கட்டாய தரச்சான்றிதழ் இலச்சினை இல்லாத மின் நீட்டிப்பு வடங்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில், பண்டாரவளை பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு 4 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதுளை மாவட்ட விசாரணை அதிகாரிகளால் குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, கட்டாய SLS தரச்சான்றிதழ் தேவைப்படும் மின் நீட்டிப்பு வடங்கள், SLS முத்திரையின்றி 2,790 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டது.
மேலும், குறைந்தபட்ச உத்தரவாதக் காலத்தை வழங்காமை மற்றும் விநியோகஸ்தர்களின் சட்டப்பூர்வ பற்றுச்சீட்டுகள் இன்றி பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்திற்கு 400,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
2017 டிசம்பர் 7ஆம் திகதி வெளியிடப்பட்ட 2048/39ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் 63ஆம் இலக்க கட்டளையின் கீழ், 250 வோல்ட்டுக்கு மிகையாத பல மின்சார சாதனங்களுக்கு கட்டாய SLS தரச்சான்றிதழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சொக்கெட்டுகள், Socket Outlets, மின் நீட்டிப்பு வடங்கள், அடாப்டர்கள், Fused Connection Units, மாற்றி பிளக்குகள் மற்றும் Cable Reels ஆகியவற்றில் உரிய SLS தரச்சான்றிதழ் இருப்பது கட்டாயமாகும்.
மின் விபத்துகள் மற்றும் தீப்பற்றல்களைத் தவிர்ப்பதற்காக, இவ்வாறான மின் சாதனங்களை கொள்வனவு செய்யும்போது SLS தர முத்திரை மற்றும் உத்தரவாதக் காலத்தை பரிசோதித்து, சட்டப்பூர்வ பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.









