அவசர காலங்களில் பொலிஸாருக்கு விரைவாக தகவல்களை வழங்கும் வகையில் புதிய அலைபேசிச் செயலியை இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
“Sri Lanka Police App” என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியில் தேசிய அடையாள அட்டை வைத்துள்ள எந்தவொரு இலங்கையரும் பதிவு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
செயலியில் உள்ள SOS பொத்தானை 10 வினாடிகள் அழுத்துவதன் மூலம், அவசரநிலை ஏற்பட்டுள்ள நபரின் இருப்பிடத் தகவல்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
119 அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாக பொலிஸாரைத் தொடர்புகொள்வதுடன், இந்த செயலி மூலமாகவும் அவசர தகவல்களை விரைவாக வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை விபத்து அல்லது ஏதேனும் அசௌகரியத்திற்கு முகங்கொடுக்கும் சந்தர்ப்பங்களிலும் செயலி மூலம் பொலிஸாருக்கு தகவல் வழங்க முடியும் என்றும், அதற்கமைய விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Play Store ஊடாக “Sri Lanka Police App” செயலியைப் பதிவிறக்கம் செய்து பதிவு செய்ய முடியும். தேசிய அடையாள அட்டை வைத்துள்ள சிறுவர்களும் இதில் பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, செயலியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டில் 119 அவசர அழைப்பு இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்திய 91 பேருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.









