தொலைக்காட்சி நேர்காணலில் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர வெளியிட்ட கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கோட்டை நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பிய குறிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
திலித் ஜயவீர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி முன்னிலையாகி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதவானிடம் அரைகுறையான தகவல்களை மட்டுமே சமர்ப்பித்ததன் அடிப்படையிலேயே குறிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறித்த நேர்காணலில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் செயல்பாடுகளையே திலித் ஜயவீர விமர்சித்ததாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் அவருக்கு இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு செப்டெம்பர் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், ரிட் மனுவையும் அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









