பொகவந்தலாவ, சிங்காரவத்தை தோட்டப் பகுதியில் பாடசாலைக்கு அருகிலுள்ள தேயிலை மலையில் நேற்று (09) காலை பாரிய சிறுத்தைப் புலியொன்று தென்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தையின் நடமாட்டம் காரணமாக குறித்த பகுதியில் பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 07ஆம் திகதி காலை, குறித்த சிறுத்தைப் புலி தேயிலை மலையில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்ததை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். இதன்போது, அதனை தமது கையடக்கத் தொலைபேசிகளில் புகைப்படமும் எடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நல்லதண்ணீர் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொகவந்தலாவ, தெரேசியா தோட்டப் பகுதியில் கடந்த வாரம் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் சிறுத்தைப் புலியின் தாக்குதலுக்கு இலக்காகி, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இப்பகுதியில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பல வளர்ப்பு நாய்களும் காணாமல் போயுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சிறுத்தைப் புலியின் நடமாட்டம் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சிங்காரவத்தை தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத தெரண









