வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று (10) மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை அவதானிக்க வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ், இன்றைய தினம் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை அவதான நிலையை எட்டியுள்ளதால், பொதுமக்கள் இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மேலதிகமாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கும் அதிக வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் நிலவும் வறட்சியான வானிலை தணிவதற்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பெய்யக்கூடிய இடைப் பருவமழை வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை பலவீனமடைந்துள்ளதால், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
எனினும், இந்த மழையினால் தற்போது நிலவும் கடுமையான வறட்சி நிலைமை தணியும் என எதிர்பார்க்க முடியாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.








