மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் ‘பறக்கும் மருத்துவர்’ சேவையில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில், மருத்துவப் பணியாளர்கள் உட்பட அதில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் விமானி மற்றும் சுகாதார அமைச்சின் நான்கு பணியாளர்கள் பயணித்ததாக சுகாதார அமைச்சர் ட்ஸுல்கெஃப்லி அஹ்மட் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் ஒரு மருத்துவ அதிகாரி, உதவி மருத்துவ அதிகாரி மற்றும் இரண்டு தாதியர்கள் அடங்குவதாகவும், அவர்கள் அனைவரும் உத்தியோகபூர்வ பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
சரவாக் மாநிலத்தின் லாங் லெல்லாங் குறுகிய ஓடுபாதை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்ததை மிரி மாவட்ட பேரிடர் முகாமைத்துவ குழு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பொதுவாக ‘பறக்கும் மருத்துவர்’ சேவை மூலம் விமானங்களைப் பயன்படுத்தி தொலைதூர மற்றும் அணுகுவதற்கு கடினமான பகுதிகளில் மருத்துவ சிகிச்சை, அவசரகால போக்குவரத்து மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
விபத்து இடம்பெற்ற பகுதியைச் சூழ்ந்திருந்த புகைமூட்டம் காரணமாக மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக சரவாக் பொலிஸ் ஆணையாளர் மொஹமட் ஸைனல் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார். மோசமான காட்சித்திறன் காரணமாக மீட்புப் பணியாளர்கள் வான்வழிச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விபத்து இடம்பெற்ற இடம் மிகவும் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ளதால், வீதி வழியாக அங்கு செல்வதற்கு சுமார் 10 மணிநேரம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை போக்குவரத்து அமைச்சின் விமான விபத்து விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.
இதனிடையே, இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக உருவான புகைமூட்டத்தால் போர்னியோ தீவில் அமைந்துள்ள சரவாக் மாநிலத்தின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
கடந்த வாரம் சரவாக் மாநிலத்தின் செரியான் மாவட்டத்தில் காற்று மாசுபாடு அபாயகரமான அளவை எட்டியதைத் தொடர்ந்து அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் காற்றின் தரம் மேம்பட்டதைத் தொடர்ந்து அந்த அவசரநிலை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









