இலங்கை தொழிலாளர்களை தாய்லாந்தில் வேலைக்கு அமர்த்துவது தொடர்பாக, ஐந்து வருட கால தொழிலாளர் ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மற்றும் துணை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தங்கள், தொழிலாளர் இடம்பெயர்வு தொடர்பான ஒத்துழைப்புக்கான முறையான கட்டமைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இதன்படி, இரு நாடுகளின் அதிகாரிகளும் இலங்கை தொழிலாளர்களை தாய்லாந்திற்கு வெளிப்படையானதும் திறமையானதுமான முறையில் ஆட்சேர்ப்பு செய்து பணிக்கு அனுப்புவதற்கான பொறிமுறைகளை உருவாக்கவுள்ளனர்.
மேலும், தாய்லாந்தில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் சட்ட உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதுடன், மனிதக் கடத்தல் மற்றும் தொழிலாளர் சுரண்டலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் இந்த ஒப்பந்தங்களின் மூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு தாய்லாந்து அண்மையில் விசா இல்லாத நுழைவு வசதியை இரத்து செய்துள்ளமை தொடர்பில் தாய்லாந்து அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படுமா என கேள்வியெழுப்பப்பட்டபோது, தாய்லாந்திற்குச் சென்ற சில இலங்கைப் பயணிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
“அண்மைக் காலத்தில் தாய்லாந்திற்குச் சென்ற பயணிகள் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இன்றுகூட தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளது. அண்மையில் பிக்குகள் குழுவொன்றும் தாய்லாந்திலிருந்து குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்தது,” என அமைச்சர் தெரிவித்தார்.
இரு நாடுகளும் புதிய இருதரப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும், இந்த ஏற்பாடுகள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி தாய்லாந்திற்கு செல்லவுள்ளதாகவும், இந்த விடயங்கள் தொடர்பில் அங்கு கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான தாய்லாந்து தூதரகம் வெளியிட்டுள்ள விசா அறிவித்தலின்படி, 2026 செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தாய்லாந்திற்குள் விசா இல்லாமல் நுழைய முடியாது.
புதிய நடைமுறையின் கீழ், தாய்லாந்திற்கு பயணிப்பதற்கு முன்னர் இலங்கைப் பயணிகள் விசா பெற்றிருக்க வேண்டும். விசா விண்ணப்பங்களை தாய்லாந்தின் e-Visa முறையின் ஊடாக ஒன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.








