Chartered Institute of Media Professionals of Sri Lanka’ என்ற சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 121(1) ஆவது உறுப்புரையின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட இந்த சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (08) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இதன்படி, சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரணானவை என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சட்டமூலத்தின் 3(1) ஆவது பிரிவு, தெளிவற்றதாகவும் அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1)(g) ஆவது உறுப்புரைகளுக்கு முரணானதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசியலமைப்பின் 84(2) ஆவது உறுப்புரையின் கீழ் விசேட பெரும்பான்மையுடன் இந்தப் பிரிவு நிறைவேற்றப்பட வேண்டும். எனினும், குறித்த பிரிவு நீக்கப்பட்டால் அரசியலமைப்புடனான முரண்பாடு நீங்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
4(o) ஆவது பிரிவு, அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1)(g) ஆவது உறுப்புரைகளுக்கு முரணானது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்டுள்ள வகையில் திருத்தம் செய்யப்படாவிட்டால், இந்தப் பிரிவை விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே நிறைவேற்ற முடியும்.
5(4b) ஆவது பிரிவு, அரசியலமைப்பின் 12(1) ஆவது உறுப்புரைக்கு முரணானது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்ற அரசியலமைப்பின் 84(2) ஆவது உறுப்புரையின் கீழ் விசேட பெரும்பான்மை தேவைப்படும். நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள வகையில் இந்தப் பிரிவு திருத்தப்பட்டால், அரசியலமைப்புடனான முரண்பாடு நீங்கும்.
இதேவேளை, சட்டமூலத்தின் ஏனைய பிரிவுகள் எவையும் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம், உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள திருத்தங்கள் மற்றும் விசேட பெரும்பான்மை தொடர்பான தேவைகளுக்கு அமைவாக, குறித்த சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதத்தை முன்னெடுப்பதற்கான வழி ஏற்பட்டுள்ளது.









