இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் பிரதானியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச ரீதியில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கான அடிப்படை என்னவென்பதை கேள்விக்குட்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை தளமாகக் கொண்ட “Impact Stories” ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொழில்முறையாகப் போரிட்டதாகவும், இறுதி இராணுவ நடவடிக்கையின்போது பொதுமக்கள் உயிரிழப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவினால் தனக்கு விதிக்கப்பட்ட தடைகள் தொடர்பில் பலமுறை விளக்கம் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அமெரிக்காவினால் எனக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அண்மையில் பிரித்தானியாவும் எனக்கு தடைகளை விதித்தது. எதற்காக? நான் என்ன தவறு செய்தேன் என்பதை எனக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
“நான் ஒரு போர்க்குற்றவாளி அல்ல. எனது நாட்டுக்காகப் போரிட்டேன்” எனவும் அவர் கூறியுள்ளார்.
தான் இராணுவச் சட்டங்களை மீறியிருந்தால், உரிய சட்ட நடைமுறைகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு அமெரிக்கா, போரின் இறுதிக்கட்டத்தில் கட்டளைப் பொறுப்பு மூலம் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நம்பகமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானியாவும் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு தடைகளை விதித்திருந்தது.
இராணுவம் திட்டமிட்டு பொதுமக்களை இலக்கு வைத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளார். எனினும், மோதல்களின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
“பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம். ஆனால் அவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை அல்ல” என அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடும்போது பொதுமக்கள் உயிரிழப்புகளை குறைப்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும், பொதுமக்கள் அருகில் இருப்பது அவதானிக்கப்பட்டால் இலக்குகள் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி இராணுவ நடவடிக்கைகளின்போது தனது 58ஆவது படைப்பிரிவு 123,000க்கும் அதிகமான பொதுமக்களை மீட்டதாகவும், மோதலின் முடிவில் சரணடைந்த சுமார் 12,000 விடுதலைப் புலி உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தனது படைப்பிரிவிடமே சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் மீள ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் “சுற்றிவளைப்பு நடவடிக்கை” ஒன்றையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
அந்த நடவடிக்கையின்போது பெருமளவான விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் விடுதலைப் புலிகளின் வடக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த மூத்த தளபதி ஒருவரும் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் சிவில் உடையில் ஆயுதத்துடன் காணப்பட்டதாகவும், போராளிகள் பொதுமக்கள் உடையில் இருந்ததால் அவர்களின் மரணங்கள் பின்னர் பொதுமக்கள் உயிரிழப்புகளாகக் குறிப்பிடப்படக்கூடும் எனவும் சில்வா தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாகவும், தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை தடுத்ததாகவும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் இராணுவ வளங்களை நிலைநிறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கை இராணுவத்தின் தரப்பிலான போரின் விளக்கத்தை சர்வதேச அளவில் திறம்பட முன்வைப்பதில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தவறியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் வலுப்பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் படைகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுடன் நேரடியாக கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“கலந்துரையாடலுக்கு வாருங்கள். குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், நீங்கள் இதைச் செய்தீர்கள் என்று கூறுங்கள். அதற்கு நாங்கள் விளக்கம் அளிக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ஏதாவது செய்திருந்தால், அதை ஏற்றுக்கொள்வோம்” எனவும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியதாகக் கூறப்படும் கருத்தையும் ஜெனரல் ஷவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.
மக்களின் குறைகளை ஆயுதப் போராட்டத்தின் ஊடாக அல்லாமல் அரசியல் ரீதியாக தீர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் படுகொலைகள், தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட அமைப்பு அல்லது அதன் ஆதரவாளர்களின் செயல்களுக்காக ஒட்டுமொத்த இன அல்லது மத சமூகத்தையும் குற்றம்சாட்டக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தின் நோக்கம் விடுதலைப் புலிகளை தோற்கடித்து, அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பொதுமக்களை விடுவிப்பதாக இருந்ததாகவும், இலங்கைப் படையினர் பொதுமக்களுக்கு எதிராக திட்டமிட்டு மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை எனவும் முன்னாள் இராணுவத் தளபதி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் இறுதி இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச அளவில் நீண்டகாலமாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மோதலின் இறுதிக்கட்டத்தில் அரச படைகள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினராலும் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் தீவிரமாக மீறப்பட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
எனினும், ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை இராணுவத் தலைவர்கள், அரச படைகள் பொதுமக்களை திட்டமிட்டு இலக்கு வைத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.









