சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும், 130 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான இரண்டு சொத்துகளின் பரிவர்த்தனைகளை தடை செய்ய இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த இரண்டு சொத்துகளும் சந்தேகநபர்கள் இருவருடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிலிபிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இந்த சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, எம்பிலிபிட்டிய கவாந்திஸ்ஸபுர பகுதியில் அமைந்துள்ள முதலாவது சொத்து, சுமார் ஒரு ஏக்கர் மற்றும் இரண்டு ரூட்ஸ் காணியுடன் இரண்டு மாடி வீடொன்றையும் கொண்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் 70 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எம்பிலிபிட்டிய புதிய நகரின் பிம்பதுயாய பகுதியில் அமைந்துள்ள இரண்டாவது சொத்து, 23.7 பேர்ச்சஸ் காணியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றை உள்ளடக்கியுள்ளது. இதன் பெறுமதி சுமார் 60 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு சொத்துகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் உரிமை மாற்றங்களை கட்டுப்படுத்தும் உத்தரவு, செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சொத்துகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.









