இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல்வாதியான மிலிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமை மற்றும் முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் ஜெனீவாவில் கவலைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வுகளில் இந்த விடயங்களை எழுப்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) தலைவர் சுரேஷ் சல்லே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் கவனம் செலுத்தவுள்ளதாக மிலிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, தனிநபர் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் காணப்படும் கவலைகளையும் இந்த அமர்வுகளின்போது முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
18 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஜெனீவாவிற்கு வருகை தந்துள்ளதாக தனது X தளப் பதிவில் குறிப்பிட்டுள்ள மிலிந்த ராஜபக்ஷ, இம்முறை இலங்கையில் “ஒடுக்கப்பட்ட எதிர்க்கட்சி அரசியல் குரல்களை” பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தாம் எழுப்பவுள்ள விடயங்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்ற பரந்த கண்ணோட்டத்தில் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.








