இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, நாளை செவ்வாய்க்கிழமை (08) முதல் வியாழக்கிழமை (10) வரை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டமொன்றை அமுல்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி, அமைச்சர் பயணிக்கும் வாகனத் தொடரணி செல்லும் வீதிகளில் தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்று வழிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
தேவையான சந்தர்ப்பங்களில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் நேரங்கள்:
செவ்வாய்க்கிழமை (08) பிற்பகல் 1.30 மணி:
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தங்கவுள்ள ஹோட்டல் வரையிலான வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.
செவ்வாய்க்கிழமை (08) இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை:
ஹோட்டலில் இருந்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் வரையிலும், அங்கிருந்து மீண்டும் ஹோட்டலுக்குச் செல்லும் வழியிலும் கட்டுப்பாடுகள்.
புதன்கிழமை (09) காலை 9.50 மணி முதல் 11.25 மணி வரை:
ஹோட்டலில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரையிலும், அங்கிருந்து மீண்டும் ஹோட்டலுக்குச் செல்லும் வழியிலும் கட்டுப்பாடுகள்.
புதன்கிழமை (09) பிற்பகல் 2.00 மணி முதல்:
அமைச்சரின் திட்டமிடப்பட்ட பயணங்களுக்கு ஏற்ப மேலதிக போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்.
புதன்கிழமை (09) இரவு 7.00 மணி முதல் 7.10 மணி வரை:
அமைச்சர் ஹோட்டலில் இருந்து மேற்கொள்ளவுள்ள திட்டமிடப்பட்ட பயணத்திற்காக போக்குவரத்து கட்டுப்பாடுகள்.
வியாழக்கிழமை (10) காலை 9.00 மணி முதல் 9.10 மணி வரை:
அமைச்சர் நாட்டை விட்டு வெளியேறும் பயணத்திற்காக போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்.
அமைச்சரின் வாகனத் தொடரணி பயணிக்கும் நேரத்திற்கு ஏற்ப, இடையிடையே இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டெம்பர் 8 முதல் 10ஆம் திகதி வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இதன்போது அவர் இலங்கை தலைவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








