தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவை நிலையத்திற்காக பயன்படுத்தப்படும் காணி, முன்னாள் ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வருடாந்தம் 10,000 ரூபாய் வாடகைக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த சேவை நிலையத்தின் முறையான பராமரிப்பு இன்மை, சுகாதாரமற்ற நிலைமை மற்றும் உணவுப் பொருட்களின் அதிக விலைகள் தொடர்பில் எழுந்துள்ள கவலைகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
312 கிலோமீற்றர் நீளமான அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் தற்போது ஒரேயொரு சேவை நிலையம் மாத்திரமே இயங்கி வருவதாகவும், மற்றுமொரு சேவை நிலையம் உடுகாவ பகுதியில் அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெலிப்பென்ன பகுதியில் அமைந்துள்ள தற்போதைய சேவை நிலையம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்புடைய நிறுவனமொன்றினால் நடத்தப்பட்டு வருவதாகவும், அது வீதி அபிவிருத்தி அதிகாரசபை அல்லது போக்குவரத்து அமைச்சினால் நேரடியாக நிர்வகிக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சேவை நிலையத்தின் நிர்வாகம் தொடர்பில் அரசாங்கம் நிதி அமைச்சு, தொழிலாளர் அமைச்சு மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி தனது கவலைகளை முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த காணி வருடாந்தம் 10,000 ரூபாய் செலுத்தும் வகையில் 99 வருடங்களுக்கு அந்த நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த குத்தகை நடவடிக்கையின் ஆரம்பத்திலேயே முறைகேடுகள் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட ஏனைய அதிவேக நெடுஞ்சாலைகளிலும் மேலதிக சேவை நிலையங்களை அமைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் வாகன சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.







