இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெற்றிடங்களை நிரப்பி, புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்ப்போருக்கு வழங்கப்படும் சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் 100 புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் இன்று (07) இடம்பெற்றன.
இதன்படி, முகாமைத்துவ உதவியாளர்கள், தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள், சாரதிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திறந்த ஆட்சேர்ப்பு நடைமுறையின் ஊடாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், தேவையான கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பணியாளர் தேவை மற்றும் சேவைத் தேவைகளுக்கு ஏற்ப புதிய ஊழியர்கள் பணியகத்தின் தலைமை அலுவலகம், மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்ப்போர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மிகவும் திறம்படவும் தடையின்றியும் சேவைகளை வழங்குவதே நோக்கமாகும்.








