போலி இலங்கை தரச்சான்று (SLS) முத்திரையையும், போலியான வர்த்தகப் பெயரையும் பயன்படுத்தி போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை உற்பத்தி செய்து விநியோகித்த சீதாவக்க, அவிசாவளை பகுதியைச் சேர்ந்த நிறுவனமொன்றுக்கும் அதன் பணிப்பாளருக்கும் எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி CAA அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட “Lanka Premium” என்ற பெயருக்குப் பதிலாக “Aquachill” என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்ட 8,500க்கும் மேற்பட்ட குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.
19 லீற்றர், 5 லீற்றர், 1,500 மில்லிலீற்றர், 1,000 மில்லிலீற்றர் மற்றும் 500 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட போத்தல்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 04ஆம் திகதி அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனமும் அதன் பணிப்பாளரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, நிறுவனத்திற்கும் அதன் பணிப்பாளருக்கும் தலா 40,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், வழக்குப் பொருட்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த முழு குடிநீர் கையிருப்பையும் அழிக்க உத்தரவிட்டது.
அதன்படி, குறித்த குடிநீர் போத்தல்கள் நீதிமன்ற வளாகத்திலேயே அழிக்கப்பட்டன.இதனிடையே, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை கொள்வனவு செய்யும் போது சரியான வர்த்தகப் பெயர், உற்பத்தித் திகதி, காலாவதித் திகதி மற்றும் உத்தியோகபூர்வ SLS தரச்சான்று முத்திரை ஆகியவற்றை அவதானமாகச் சரிபார்க்குமாறு CAA நுகர்வோரை அறிவுறுத்தியுள்ளது.
மோசடியான அல்லது சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் இருப்பின், 1977 என்ற CAA அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறும் நுகர்வோரிடம் கோரப்பட்டுள்ளது.









