மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி, காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகளை இன்று (07) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இம்மாதத்திற்குள் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கையை 122 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் மெட்ரோ பேருந்து சேவையை 172 பேருந்துகள் வரை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பேருந்து சேவையை நடத்துவதற்கான வாய்ப்பை எதிர்காலத்தில் தனியார் துறையினருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
நாட்டின் நகர்ப்புற போக்குவரத்து துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், மெட்ரோ பேருந்து சேவைக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் போக்குவரத்து அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் லங்கா மெட்ரோ டிரான்சிட் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் இணைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதலாவது டிப்போ முனையம் கடந்த 04ஆம் திகதி பத்தரமுல்லை, தலங்கம பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடவத்தை டிப்போ முனையத்தின் செயல்பாடுகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மெட்ரோ பேருந்து சேவையின் நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக தலங்கம, கடவத்தை, ஏகல மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு நான்கு புதிய டிப்போக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது மெட்ரோ பேருந்து சேவையின் முதலாவது வழித்தடத்தின் கீழ், மாகும்புரவிலிருந்து மகரகம ஊடாக கடவத்தை வரை பேருந்து சேவைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் மேலும் 15 புதிய மெட்ரோ பேருந்துகளை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பேருந்து நிறுத்தங்கள், ஒருங்கிணைந்த கட்டண முறை, டிப்போ வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுடன் மெட்ரோ பேருந்து சேவையை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, பொதுப் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் இலங்கை போக்குவரத்து சபையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகளை இறக்குமதி செய்யவும், இலங்கை போக்குவரத்து சபையின் நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகளை கொள்வனவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.









