திருத்தப்பட்ட விசா நடைமுறைகளின் கீழ், 2026 செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தாய்லாந்தின் விசா விலக்கு திட்டத்திற்கு தகுதி பெறமாட்டார்கள் என தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட விசா விலக்கு மற்றும் Visa on Arrival திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு ஓகஸ்ட் 31ஆம் திகதி அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றன.
கடந்த மே மாதம் தாய்லாந்து அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட மீளாய்வைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, தற்போது நடைமுறையில் உள்ள 60 நாள் விசா விலக்கு திட்டம் இரத்து செய்யப்படுவதுடன், குறுகிய காலத்திற்கு விசா இன்றி தாய்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்படும் நாடுகளின் பட்டியலும் திருத்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் பொருளாதார நலன்கள், பரஸ்பர விசா நடைமுறைகள் மற்றும் தாய்லாந்தின் e-Visa முறைமை கிடைப்பது உள்ளிட்ட காரணிகள் இந்த மீளாய்வில் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன.புதிய நடைமுறைகள் அமுலுக்கு வந்த பின்னர் தாய்லாந்து செல்லும் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், பயணம் செய்வதற்கு முன்னர் உரிய விசாவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
விசா விண்ணப்பங்களை தாய்லாந்தின் இணையவழி e-Visa முறைமை ஊடாக சமர்ப்பிக்க முடியும். கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதரகம் நேரடியாக விசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளாது. விண்ணப்பங்களையும் அதற்கான கொடுப்பனவுகளையும் இணையவழியாகவே மேற்கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும், செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் தற்போதைய விசா விலக்கு நடைமுறையின் கீழ் தாய்லாந்திற்குள் நுழையும் பயணிகள், அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதிக் காலம் நிறைவடையும் வரை அந்நாட்டில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட விசா நடைமுறைகள் தொடர்பான “New Visa Measures” என்ற அறிவிப்பை கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதரகம் செப்டெம்பர் 4ஆம் திகதி வெளியிட்டுள்ளது.









