வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகவுள்ள நிலையில், டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 62 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை உள்ளடக்கிய விசேட ஐந்து நாள் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் செப்டெம்பர் 14 முதல் 19ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மேல், தென், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் 96,482 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 73 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளர்களில் உயிரிழப்பு வீதம் 0.076 சதவீதமாக பதிவாகியுள்ளது.
பதிவான மொத்த நோயாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். அந்த மாகாணத்தில் 50,395 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கம்பஹா மாவட்டத்தில் 20,527 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 19,074 பேரும் பதிவாகியுள்ளனர்.
இதற்கு அடுத்ததாக தென் மாகாணத்தில் 13,740, மத்திய மாகாணத்தில் 8,093 மற்றும் சபரகமுவ மாகாணத்தில் 5,590 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மாதாந்த தரவுகளின்படி, வருடத்தின் நடுப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 29,964 பேரும், ஜூன் மாதத்தில் 21,533 பேரும் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனுடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் 7,866 பேரும், மார்ச் மாதத்தில் 5,601 பேரும் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ளனர்.









