எந்தவொரு சூழ்நிலையிலும் தேர்தல்களை ஒத்திவைக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் திட்டமிட்டபடி நடத்துவதாகவும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது சட்டரீதியான தடைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புளத்சிங்களவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
2024 செப்டெம்பர் 21ஆம் திகதி மக்கள் மிகவும் துணிச்சலான தீர்மானத்தை மேற்கொண்டு, நீண்ட காலமாக மாறி மாறி நாட்டை ஆட்சி செய்த அரசியல் அணிகளைத் தோற்கடித்து தேசிய மக்கள் சக்தியிடம் நாட்டை ஒப்படைத்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வலுவான அரசாங்கத்தை வழங்கியதாகவும் அவர் கூறினார்.பணம், ஊடகம் அல்லது அரச அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் சாதாரண மக்களின் சக்தியின் ஊடாக இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டதாகவும், அரசாங்கத்தின் உண்மையான பலம் மக்களே எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய ஊழல், கறுப்புப் பொருளாதாரம் மற்றும் இனவாத அரசியலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் அரசாங்க வருமானம் 16.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், 1957ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறைந்தளவான வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக 2 டிரில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக மூன்று முக்கிய அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் எனவும், அவை வெளிநாட்டுக் கடனின்றி திறைசேரியின் நிதியிலேயே நிர்மாணிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
ரயில் பாதைகளை மின்மயமாக்குதல், மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டம், நாடு முழுவதும் 4G வசதியை விரிவுபடுத்துதல் மற்றும் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் உள்ளிட்ட பல திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 74 முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இனவாத மோதல்கள் தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பொலிஸ் முறைப்பாடுகூட பதிவாகவில்லை எனவும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல்கள் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவே ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக சிலர் கூறுவதாகத் தெரிவித்தார்.
“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல்களை ஒத்திவைக்கமாட்டோம். ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் திட்டமிட்டபடி நடைபெறும்” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது சட்டரீதியான தடைகள் காணப்படுவதாகவும், நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் தேர்தல் முறை தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.









