ரஷ்யாவின் அஸூர் எயார் (Azur Air) விமான நிறுவனம், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அஸூர் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் 5 விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அஸூர் எயார் நிறுவனத்திற்கு மேலதிகமாக, எரோஃப்ளோட் (Aeroflot) மற்றும் எஸ்7 (S7) ஆகிய விமான நிறுவனங்களும் ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 11 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரித்தானியாவின் பிரிட்டிஷ் எயார்வேஸ் (British Airways) விமான நிறுவனமும் இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் பிரித்தானியாவின் கெட்விக் (Gatwick) விமான நிலையத்திற்கும் கொழும்புக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







