குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் இலங்கை சுங்கத்திணைக்களம் முன்னெடுத்த நடவடிக்கைகளின் மூலம், நாட்டின் “கருப்புப் பொருளாதாரம்” ஊடாக சட்டவிரோதமாக டொலர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் பேரணியொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையிலிருந்து சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சட்டவிரோதமாக வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“சுமார் 1 பில்லியன் டொலர்கள் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது எமது நாட்டின் முழு தேயிலை ஏற்றுமதி மூலம் நாம் ஈட்டும் வருமானத்திற்கு நெருக்கமான தொகையாகும்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த முறைமையின் மூலம் நன்மையடைந்தவர்கள், அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் தற்போது அச்சமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதிகாரப்பூர்வமற்ற வழிகள் ஊடாக டொலர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்கு CID மற்றும் சுங்கத்திணைக்களம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் அரசாங்கத்தின் வருமானம் திறைசேரியைச் சென்றடைவதற்கு முன்னரே வேறு வழிகளுக்கு திருப்பிவிடப்பட்டதாகவும், திறைசேரியைச் சென்றடைந்த நிதியின் ஒரு பகுதியும் பின்னர் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“அந்த அனைத்து வழிகளையும் நாம் மூடியுள்ளோம். திறைசேரிக்கு வர வேண்டிய ஒவ்வொரு சதமும் திறைசேரியை வந்தடைவதை உறுதி செய்துள்ளோம்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் அரசாங்க வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 16.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், இது சுமார் மூன்று தசாப்தங்களில் பதிவான அதிகபட்ச மட்டமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரச வருமானம் அதிகாரப்பூர்வமற்ற மற்றும் ஊழல் நிறைந்த பொருளாதாரத்திற்குள் கசிந்து செல்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் இந்த முன்னேற்றத்திற்கு ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 1957ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை பதிவுசெய்துள்ள மிகக் குறைந்த வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை எட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்க வருமானத்தை அதிகரித்ததுடன், செலவினங்களையும் கட்டுப்படுத்தியதன் மூலம் இந்த நிலையை அடைய முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.
முறையான மதிப்பீடுகள் இன்றி பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுத்த முந்தைய அரசாங்கங்களையும் ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற திட்டங்கள் போதிய ஆய்வுகள் இன்றி முன்னெடுக்கப்பட்டால், அவை பொதுமக்களின் நிதியை வீணடிக்கும் திட்டங்களாக மாறக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த ஆண்டு அரசாங்கம் மூலதனச் செலவினங்களுக்காக 2 டிரில்லியன் ரூபாவை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அபிவிருத்தி செலவினமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 பில்லியன் ரூபா வரையிலான வரவு-செலவுத் திட்ட கையிருப்பு நிதியை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மாவட்ட மட்டத்திலான முன்னுரிமைத் தேவைகளுக்காக இந்த நிதியைப் பயன்படுத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்களிப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தமது அரசாங்கத்தின் கீழ் பல்வேறு நலன்புரி மற்றும் கல்வி சார்ந்த கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு, உரமானியம் , முதியவர்களுக்கான கொடுப்பனவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு நலன்புரி கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.









