கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (செப்டெம்பர் 6) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் பல இடங்களில் கடும் மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் வீடுகளுக்குள் அல்லது பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறும், திறந்தவெளிகள் மற்றும் நீர்நிலைகளைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கம்பியுடனான தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களில் பயணிப்பதையும் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், முறிந்து விழக்கூடிய மரங்கள் மற்றும் அறுந்து விழுந்துள்ள மின்சாரக் கம்பிகள் தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.









