இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது, இலங்கைத் தலைவர்களுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ராஜ்நாத் சிங் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்ட குழுவொன்றுக்கும் அவர் தலைமை தாங்கவுள்ளார்.
இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதில் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் நீண்டகால நாகரிகத் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டவை என இந்தியா தெரிவித்துள்ளது.
பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதுடன், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான வலுவான தொடர்புகளும் காணப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா வழங்கிய உதவிகளையும், 2025ஆம் ஆண்டு டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து வழங்கிய ஆதரவையும் இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” (Neighbourhood First) கொள்கையின் முக்கிய எடுத்துக்காட்டுகளாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மத்தியில் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறவுள்ளது.








