கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதிக்குள் அவற்றை முழுமையாக நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, செப்டம்பர் 5ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இம்முறை நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.









