அலி அல்-தாஹர் மலைத்தொடரின் கீழ் அமைந்திருந்த சுரங்கப்பாதை வலையமைப்புகள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தெற்கு லெபனானில் தனது படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ள பகுதிகளை குறைக்க இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருவதாக இஸ்ரேலின் பொதுத்தொலைக்காட்சி ஒளிபரப்பாளரான கான் (Kan) தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவலின்படி, இஸ்ரேல் எல்லைக்கு அருகில் புதிய பாதுகாப்பு வலயமொன்றை அமைப்பது தொடர்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புக்குள் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
தற்போது லிட்டானி ஆற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகளையும் உள்ளடக்கியுள்ள “மஞ்சள் கோட்டின்” சில பகுதிகளில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) பின்வாங்கி, இஸ்ரேல் எல்லைக்கு 3 முதல் 4 கிலோமீற்றர் நெருக்கமாக நிலைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் பிரதேசத்துக்குள் அமைக்கப்படும் புதிய “சாம்பல் கோட்டில்” இராணுவ நிலைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், இந்தத் திட்டம் இதுவரை இறுதி செய்யப்படவில்லை என்றும், இஸ்ரேலின் அரசியல் தலைமையால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கான் தெரிவித்துள்ளது.
மேலும், சில பகுதிகளை லெபனான் இராணுவத்திடம் ஒப்படைப்பது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட விடயங்கள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலி அல்-தாஹர் மலைத்தொடர் நபத்தியே பிராந்தியத்தையும், தெற்கு லெபனானில் இருந்து இக்லிம் அல்-துஃப்பா பகுதிக்குச் செல்லும் பாதைகளையும் மேலிருந்து கண்காணிக்கக்கூடிய முக்கியமான இடமாகும்.
கடந்த சில வாரங்களாக இந்தப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், சில போராளிகள் கொல்லப்பட்டதுடன், மேலும் சிலர் தப்பிச் சென்றதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
சுரங்கப்பாதை வலையமைப்பிற்குள் கட்டளை மையங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் தங்குமிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.







