காஸாவில் இருந்து பாலஸ்தீனர்களை கட்டாயமாக வெளியேற்றும் எந்தவொரு நடவடிக்கையையும் ஐரோப்பிய ஒன்றியம் நிராகரிப்பதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐரோப்பிய ஆணையத்தின் பேச்சாளர் கிறிஸ்டியன் விகாண்ட், “காஸா பகுதியில் மக்கள்தொகை அல்லது பிராந்திய மாற்றங்களை ஏற்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
“காஸா மக்களை கட்டாயமாக வெளியேற்றக் கூடாது. எதிர்காலத்தில் உருவாக்கப்படவுள்ள பாலஸ்தீன அரசின் ஒருங்கிணைந்த பகுதியாக காஸா உள்ளது” என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் ஆகியோர் காஸா பகுதியில் இருந்து பாலஸ்தீனர்களை கட்டாயமாக வெளியேற்றும் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.பாலஸ்தீனர்களை கட்டாயமாக இடம்பெயரச் செய்வது சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது என்பதுடன், அது போர்க்குற்றமாகவும் அமையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






