காஸாவில் இருந்து பெருமளவிலான பாலஸ்தீனர்களை “கடல், தரை மற்றும் வான் வழியாக” வெளியேற்றும் திட்டம் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்த கருத்துக்கு பாலஸ்தீன மனித உரிமைகள் மையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காட்ஸ், “இந்த இடம்பெயர்வு இல்லாமல் காஸாவுக்கு உண்மையான தீர்வு இல்லை” எனக் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தத் திட்டத்தை இடைநிறுத்தியுள்ள போதிலும், அதனை கைவிடவில்லை என்றும், அமெரிக்காவின் பச்சைக்கொடி கிடைத்தவுடன் மக்களை “சாத்தியமான அனைத்து வழிகளிலும்” வெளியேற்ற இஸ்ரேல் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை (04) வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீன மனித உரிமைகள் மையம், காட்ஸின் கருத்துகளுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அண்மையில் வெளியிட்ட கருத்துகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.
காஸாவின் சுமார் 60 சதவீதப் பகுதிகளை இஸ்ரேலியப் படைகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அங்கிருந்து இஸ்ரேல் படைகள் பின்வாங்கப் போவதில்லை என்றும் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துகள், காஸாவின் மக்கள்தொகை அமைப்பை திட்டமிட்டு மாற்றுவதற்கான முயற்சியை சுட்டிக்காட்டுவதாக மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது.
மேலும், பாலஸ்தீனர்களை கட்டாயமாகவோ அல்லது மனிதாபிமான நடவடிக்கை என்ற போர்வையிலோ காஸாவில் இருந்து வெளியேற்றுவது சட்டவிரோதமான கட்டாய இடமாற்றமாக அமையும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
பாலஸ்தீன சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டியுள்ள அந்த அமைப்பு, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 73,470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 174,540 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கட்டுமானப் பொருட்களுக்கு இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக காஸாவில் மறுசீரமைப்புப் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும், 80 சதவீதத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றாக அழிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.







