அமெரிக்க இராணுவத்திடம் முக்கிய ஆயுதங்களின் கையிருப்பு குறைந்து வருவதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவம் சில முக்கியமான ஆயுதங்களை இழந்து வருவதாக அண்மையில் Al Jazeera உள்ளிட்ட பல முன்னணி அமெரிக்க ஊடகங்களும், சுயாதீன ஆய்வு நிறுவனங்களும் தகவல் வெளியிட்டிருந்தன.
குறிப்பாக Tomahawk ஏவுகணைகள், Patriot ஏவுகணைகள் மற்றும் THAAD ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்களின் கையிருப்பு குறைந்து வருவதாக அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டியிருந்தன.
இந்நிலையில், தனது Truth Social சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு குறித்த இந்த தகவல்கள் “100 சதவீதம் தவறானவை” என தெரிவித்துள்ளார்.
இத்தகைய செய்திகளை “தேசத்துரோகமானவை” என விமர்சித்த அவர், அமெரிக்க இராணுவத்திடம் நடுத்தர மற்றும் உயர் தரத்திலான வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் “கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில்” கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா தனது ஆயுத உற்பத்தியை மேலும் துரிதப்படுத்தி வருவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நட்பு நாடுகளுக்கான அமெரிக்க ஆயுத விற்பனைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போரின் பின்னணியில், சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கான சில ஆயுத விநியோகங்கள் பல மாதங்களுக்கு தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அமெரிக்க இராணுவத்திடம் ஆயுத கையிருப்பு பற்றாக்குறை இருப்பதாக வெளியான தகவல்களை ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், நாட்டின் ஆயுத உற்பத்தி திறன் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.








