தொழிலதிபர் டட்லி சிறிசேனவின் அரலிய குழுமத்தின் நிதியுதவியுடன் சுமார் 35 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட பொலன்னறுவை ரயில் நிலையம் இன்று (03) பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் 100 ரயில் நிலையங்களை புனரமைத்து, அவற்றின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “Dream Destination” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தூய்மையான இலங்கை செயலகம் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு தனியார் துறையினரின் நிதி மற்றும் தொழில்முனைவோர் ஆதரவும் வழங்கப்படுகிறது.
இதன் கீழ், பொலன்னறுவை ரயில் நிலையத்தின் பிரதான கட்டடம் புனரமைக்கப்பட்டதுடன், பயணிகளுக்கான காத்திருப்பு பகுதிகள், பயணப் பொதிகளை சேமிப்பதற்கான வசதிகள், மதகுருமார்களுக்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஆண் மற்றும் பெண் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளும் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.நாடளாவிய ரீதியில் 100 ரயில் நிலையங்களை நவீனமயப்படுத்துவதன் மூலம், பயணிகளுக்கு மிகவும் வசதியானதும் திறமையானதுமான ரயில் சேவையை வழங்குவதே “Dream Destination” வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.









