கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் சீட்டு (VVPAT) இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
எனினும், இந்த சரிபார்ப்பின்போது முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறி மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சரிபார்ப்புக்காக எடுத்துச் செல்லப்பட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென கோளாறடைந்து செயலிழந்ததாகவும், ஆறு வாக்குச்சாவடிகளில் VVPAT சீட்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்களையும் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும், வி.எஸ். பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என வாதிட்டார். சட்டமன்ற உறுப்பினரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்றும், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால் இதே கோரிக்கையுடன் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்களை சரிபார்க்கக் கோரி தேர்தல் முடிவுகள் வெளியான மூன்று நாட்களிலேயே, அதாவது மே 7ஆம் திகதி விண்ணப்பித்ததாகத் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான 45 நாள் காலக்கெடு முடிந்த பின்னரே வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதாகவும், எனவே இந்த மனுவைத் தாக்கல் செய்வதைத் தவிர வேறு நிவாரணம் தங்களுக்கு இல்லை என்றும் அவர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்த நீதிபதிகள், மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.








