“Rich Dad Poor Dad” என்ற பிரபல நூலின் ஆசிரியரான ரொபர்ட் கியோசாகி, தனது பரந்த ரியல் எஸ்டேட் முதலீடுகளுடன் தொடர்புடைய 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நிதி வெற்றியின் ரகசியங்களைப் போதித்து பெரும் செல்வத்தை ஈட்டியுள்ள 79 வயதான கியோசாகி, வருமானம் ஈட்டக்கூடிய சொத்துக்களை வாங்குவதற்காக கடன் பெறுவது செல்வந்தர்கள் பயன்படுத்தும் ஒரு உத்தி என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
“எனவே, நான் 1.2 பில்லியன் டொலர் கடனில் இருக்கிறேன்” என அவர் ‘Get Rich Education’ போட்காஸ்டில் தெரிவித்துள்ளார்.
“நான் செய்வதை மற்றவர்கள் செய்யக்கூடாது, இல்லையா?” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஆனால், 1974ஆம் ஆண்டு முதலே இது குறித்து நான் கற்று வருகிறேன். நீங்கள் கடனைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்றால், அது குறித்து போதிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அவரது முன்னாள் மனைவியும் வணிகப் பங்காளியுமான கிம் கியோசாகி, 1.2 பில்லியன் டொலர் என்ற தொகை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும்
“நாங்கள் எங்கள் பங்காளிகளுடன் இணைந்து ஏராளமான அடுக்குமாடிக் குடியிருப்புகளை வைத்திருக்கிறோம்” என கிம் கூறியுள்ளார். அவர்களின் முதலீட்டுத் தொகுப்பில் சுமார் 1,500 குடியிருப்பு அலகுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், ஆம், எங்களுக்கு இவ்வளவு கடன் உள்ளது. ஆனால் அந்தக் கடன் ரியல் எஸ்டேட் சொத்துக்களுடன் தொடர்புடையது. அதில் ரொபர்ட்டின் தனிப்பட்ட பங்கு சிறியது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மிகப்பெரிய கடன் தொகை கியோசாகியின் முதலீட்டு உத்தியின் விளைவாக உருவாகியுள்ளது.
அவரது சொத்துக்களின் மதிப்பு அதிகரிக்கும்போது, அந்த அதிகரித்த சொத்து மதிப்பை அடிப்படையாகக் கொண்டு அவர் மேலதிகமாக கடன் பெறுகிறார். ‘Vanity Fair’ படி, சொத்துக்களை விற்பனை செய்யாமல் அவற்றின் மதிப்புக்கு எதிராக பெறப்படும் கடன் தொகையை கியோசாகி வரி செலுத்த வேண்டியதில்லாத வருமானமாக கருதுகிறார்.
மேலும், ஒவ்வொரு முதலீட்டையும் தனித்தனி வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்கள் (Limited Liability Companies – LLCs) மூலம் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு முதலீட்டில் பிரச்சினை ஏற்பட்டால், மற்ற முதலீடுகள் அதனால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன.
“எல்லாம் மோசமாகிப் போனால், நீங்கள் என் வழக்கறிஞரிடம் பேசலாம்” என ரொபர்ட் கியோசாகி ‘Vanity Fair’ இதழிடம் தெரிவித்துள்ளார்.
“பாதுகாப்புச் சுவர்கள் (Firewalls) – பணக்காரர்கள் இப்படித்தான் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கியோசாகியின் கூற்றுப்படி, அவர் ஆண்டுக்கு சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டுகிறார். இந்தக் கூற்று உண்மையாக இருந்தால், அவரது தனிப்பட்ட கடன் பங்கு சுமார் 30 மில்லியன் முதல் 60 மில்லியன் அமெரிக்க டொலர் வரை இருக்கலாம் என ‘Vanity Fair’ மதிப்பிட்டுள்ளது.
“அவர் அதிர்ச்சியளிக்கும் வகையிலான கருத்துகளைக் கூற விரும்புகிறார்” என கிம் கியோசாகி தெரிவித்துள்ளார்.
முதலில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பில்லியன் டொலர் கடன் என்ற தொகையை அவர் பயன்படுத்துவதாகவும், பின்னர் “முதலீட்டுக்கான கடன் ஏன் நல்லது” என்பதை விளக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tax Maverick AI நிறுவனத்தின் நிறுவுநரும், பல குடும்பங்கள் வசிக்கும் ரியல் எஸ்டேட் சொத்துக்களில் இதேபோன்ற உத்தியைப் பயன்படுத்துவதாகக் கூறும் வரி நிபுணருமான டேவிட் ஏ. பெரெஸ், கியோசாகியின் அணுகுமுறையை “சிறந்த உத்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சொத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு கடன் பெறுவது பொதுவாக வரியில்லாத கடனாக அமையும் என்றும், காரணம் அந்தச் சொத்து விற்பனை செய்யப்படாததால் அந்தத் தொகை வருமானமாகக் கருதப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், மேலதிகமாக கடன் பெறுவது அடமானத் தவணைகள் மற்றும் வட்டி செலவுகளை அதிகரிப்பதுடன், பணப்புழக்கத்தையும் குறைக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரிசோனா மாநிலம் ஸ்கொட்ஸ்டேலைத் தளமாகக் கொண்ட JPTD Partners ஆலோசனை நிறுவனத்தின் நிறுவுநர் ஜோன் பூல், இதுகுறித்து எச்சரிக்கையான கருத்தை வெளியிட்டுள்ளார்.
“நல்ல கடன், மோசமான கடன் என இருக்கிறது. அதற்குப் பிறகு 1.2 பில்லியன் டொலர் கடன் உள்ளது. அந்த அளவிலான கடனை வைத்திருப்பவர் தான் என்ன செய்கிறார் என்பதைத் துல்லியமாக அறிந்திருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
“Leverage என்பது சொத்து மதிப்பு உயரும்போது சிறப்பாகச் செயல்படும். ஆனால் அந்த உயர்வு தொடர்ந்து நடைபெறவில்லை என்றால், அது நிதி ரீதியாக கீழ்நோக்கி வரும் போது ஒரு சங்கிலித் தாக்கத்தைப் போல மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதிப்பு அதிகரித்த சொத்துக்களுக்கு எதிராக கடன் பெறுவது சில வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில், குறிப்பாக சொத்து திட்டமிடல் (estate planning) போன்றவற்றில் பயனுள்ளதாக இருக்கலாம் என ஜோன் பூல் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த உத்தியை காலவரையின்றி தொடர்வது ஆபத்தானது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
“இது என்றென்றும் தொடராது. ஒரு கட்டத்தில் முடிவு வரும். அந்த முடிவு எப்போது வந்தாலும், அதன் அளவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
“கியோசாகி இதை ‘Rich Dad debt’ என அழைக்கலாம். ஆனால் சராசரி முதலீட்டாளருக்கு இது மிக விரைவாக ‘Poor Dad bankruptcy’ ஆக மாறக்கூடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
1997ஆம் ஆண்டு முதன்முதலில் சுயமாக வெளியிடப்பட்ட ‘Rich Dad Poor Dad’ நூல் இதுவரை 44 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளதாக ‘Vanity Fair’ தெரிவித்துள்ளது.
இந்த நூலில், தனது உயிரியல் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை “Poor Dad” என்றும், தனது சிறுவயது சிறந்த நண்பரின் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை “Rich Dad” என்றும் கியோசாகி ஒப்பிட்டுள்ளார்.
ரொபர்ட் கியோசாகியின் உயிரியல் தந்தையான ரால்ஃப் கியோசாகி, ஹவாய் மாநிலத்தின் கல்வித் துறை தலைமை அதிகாரியாகப் பணியாற்றியதுடன், 1970ஆம் ஆண்டு லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பின்னர், தனது “Rich Dad” என கியோசாகி அடையாளப்படுத்தியவர் ஹவாயைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட் கிமி ஆவார். அவர் ஒரு காலத்தில் Waikiki Biltmore Hotel உள்ளிட்ட பல ஹோட்டல்களை உள்ளடக்கிய ஹோட்டல் சங்கிலியை வைத்திருந்தார்.
ரியல் எஸ்டேட் போன்ற பணப்புழக்கத்தை உருவாக்கக்கூடிய சொத்துக்களில் முதலீடு செய்வது, வரிகளைக் குறைப்பது, முதலீடுகளை வாங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் கடனுக்கும் அன்றாட செலவுகளுக்காகப் பெறப்படும் கடனுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது ஆகியவற்றை கியோசாகி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பில் ரொபர்ட் கியோசாகியிடம் ‘The Post’ கருத்து கோரியுள்ளது.









