இலங்கையில் நடைபெறவிருந்த முதலாவது ஐசிசி மகளிர் சாம்பியன்ஸ் தொடரை இந்தியாவுக்கு மாற்றுவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தீர்மானித்துள்ளது.
இதன்படி, அடுத்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இந்தத் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது.ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் மும்பையில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தத் தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடத்தப்படவுள்ளது.
இந்தத் தொடர் ஆரம்பத்தில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி வருடாந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தொடரை இந்தியாவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடரை நடத்துவதற்காக பங்களாதேஷ், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை ஐசிசி தனது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்களின் அடிப்படையில் பரிசீலித்தது.
இதன் பின்னர், மாற்று ஏற்பாடாக இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முடிவை செப்டம்பர் 1ஆம் திகதி நடைபெற்ற ஐசிசி நிர்வாகக் குழு உறுதி செய்துள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.









