இலங்கை தனது முதலாவது தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதுடன், உணவுப் பாதுகாப்பு நிர்வாகத்தை வலுப்படுத்தி, நாட்டின் வேளாண்-உணவு (Agrifood) அமைப்புகள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தக் கொள்கை, உணவு உற்பத்தி முதல் நுகர்வு வரையிலான முழு உணவுச் சங்கிலியிலும் ஒருங்கிணைந்த மற்றும் அபாய அடிப்படையிலான அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது.
இலங்கையில் உணவுப் பாதுகாப்பை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டக் கட்டமைப்பு ஏற்கனவே காணப்பட்ட போதிலும், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் துறைகளின் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான தேசிய அளவிலான கொள்கை இதுவரை இல்லாதிருந்தது.
இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய கொள்கை, உணவுப் பாதுகாப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துதல், கண்காணிப்பு முறைகளை மேம்படுத்துதல், அபாய மதிப்பீடு மற்றும் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துதல், ஆய்வகங்களின் திறனை அதிகரித்தல், உணவுப் பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்துதல் மற்றும் உற்பத்தியாளர்கள், உணவு வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுகிறது.
மாறிவரும் உணவு உற்பத்தி முறைகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச உணவு வர்த்தகத்தின் விரிவாக்கம், நுகர்வோரின் மாறிவரும் விருப்பங்கள் மற்றும் சிக்கலான உணவு விநியோகச் சங்கிலிகளால் உருவாகும் புதிய உணவுப் பாதுகாப்பு சவால்களையும் இந்தக் கொள்கை கவனத்தில் கொள்கிறது.
தேசிய, மாகாண மற்றும் உள்ளூர்மட்டங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதுடன், தடுப்பு மற்றும் அறிவியல் அடிப்படையிலான அபாய மேலாண்மைக்கு இந்தக் கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது.
சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, இந்தக் கொள்கை இலங்கையின் உணவுப் பாதுகாப்பு முறையை வலுப்படுத்துவதில் முக்கியமான மைல்கல் என தெரிவித்துள்ளார்.
பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் உணவு அமைப்புகள் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் இது முக்கிய பங்களிப்பை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான பிரதிநிதித்துவத்தின் ஒத்துழைப்புத் தலைவர் டொக்டர் ஜோஹான் ஹெஸ்ஸே, உணவுப் பாதுகாப்பு என்பது நுகர்வோரின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கு மட்டுமன்றி, வலுவான உணவு அமைப்புகளை உருவாக்குவதற்கும், சந்தை நம்பிக்கையை அதிகரிப்பதற்கும், புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அவசியமானது என தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் BESPA திட்டத்தின் ஊடாக, இலங்கையின் முதலாவது தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கையை உருவாக்குவதற்கு ஆதரவளித்ததில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
FAO, ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் Mainstreaming Standards-Based Best Practices for Agri-Food Sector Development (BESPA) திட்டத்தின் மூலம், கொள்கை உருவாக்கத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்தே சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கியுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களின் உதவியுடன் கொள்கையின் ஆரம்ப வரைவு தயாரிக்கப்பட்டதுடன், பல கட்ட தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் பங்குதாரர் ஆலோசனைகள் மூலம் அது மேம்படுத்தப்பட்டது.
தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள புதிய உணவுச் சட்டம் ஆதரவாக அமையும். இந்தச் சட்டம் இலங்கையில் உணவுப் பாதுகாப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான சட்ட அடித்தளத்தை வழங்கும்.
2026 ஜூலை மாதம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் நடைபெற்ற தேசிய பங்குதாரர் ஆலோசனைக் கூட்டத்திற்கு FAO ஆதரவளித்திருந்தது. இதன்போது முன்மொழியப்பட்ட புதிய சட்டத்தின் சமீபத்திய வரைவு பரிசீலிக்கப்பட்டு, முக்கிய பங்குதாரர்களிடமிருந்து இறுதி தொழில்நுட்ப கருத்துகள் பெறப்பட்டன.
இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான FAO பிரதிநிதி விம்லேந்திர சரண், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
புதிய கொள்கை உணவுப் பாதுகாப்பு நிர்வாகத்தை வலுப்படுத்தவும், துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், நுகர்வோர், உற்பத்தியாளர்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் தடுப்பு மற்றும் அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறைகளை ஊக்குவிக்கவும் ஒரு மூலோபாய வழிகாட்டியாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கை நடைமுறைப்படுத்தலுக்காக ஆறு முக்கிய மூலோபாய முன்னுரிமைப் பகுதிகளை அடையாளப்படுத்தியுள்ளது.
அவை:
- உணவுப் பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்
- முழு உணவுச் சங்கிலியிலும் உணவுப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டை மேம்படுத்துதல்
- சட்டங்கள், தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை வலுப்படுத்துதல்
- கண்காணிப்பு, ஆய்வகங்கள் மற்றும் அபாயப் பகுப்பாய்வை மேம்படுத்துதல்
- தகவல் பரிமாற்றம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல்
- கொள்கையைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முறைகளை உருவாக்குதல்
உணவுப் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் உணவு மூலம் பரவும் நோய்களைக் குறைத்தல், நுகர்வோர் நம்பிக்கையை அதிகரித்தல், சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குதல், ஊட்டச்சத்து நிலைமைகளை மேம்படுத்துதல், உணவு வீணாவதைக் குறைத்தல், சுற்றுலாத்துறைக்கு ஆதரவளித்தல் மற்றும் இலங்கையின் உணவு மற்றும் விவசாயத் துறைகளின் போட்டித்திறனை அதிகரித்தல் ஆகிய பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும், நாட்டின் உணவுப் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் FAO தொடர்ந்து ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளது.









